இரவுகளின் நட்சத்திரத்தில் உறைபவர்கள் - கருப்பண்ணா


இரவுகளின் நட்சத்திரத்தில் உறைபவர்கள் - கருப்பண்ணா
 

      நாவலின் ஆரம்ப வரிகளைப் போல, சூரியன் மேகங்களுக்கு இடையை மறைந்தும் ஒளிர்வதுமான நாட்பொழுதில் "நட்சத்திர வாசிகள்"நாவலை வாசிக்க தொடங்கினேன்.

      உலகில் கடந்த பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியடைந்த துறையான தகவல் தொழில்நுட்ப துறையின்(Information technology) ஒரு நிறுவனத்தை பற்றியும், அதில் உறைந்து வாழும் மனிதர்களைப்   பற்றிய சித்திரம் தான் நட்சத்திர வாசிகள்.

      இந்நாவலில் உலாவி வரும் மனிதர்களின் மேல் எதோ ஒரு வகையில் அழுத்தம் என்பது படர்ந்திருப்பது தெரிகிறது.

      நாவலின் ஆரம்பத்தில் அறிமுகமாகும் ராமசுப்பு,அன்றாடம் நான் எனது அலுவலகத்தில் சந்தித்த ஒரு மனிதரையும் அவரது தினசரி நடவடிக்கைகளையும் நினைவு படுத்தி செல்கிறார். அனைத்து தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த கடைநிலை ஊழியர்களின் அன்றாடம் என்பது எந்த ஒரு மாற்றமும் இன்றி நிகழ்வதை உணரமுடிகிறது.

       தகவல் தொழில்நுட்ப துறையின் பணிபுரியும் கணவன் மனைவிக்கும் இடையே ஆன மனக் கசப்புகளையும், கிராமத்தில் வளர்ந்த மிதிலனுக்கும் பெருநகரங்களில் வசித்த மீராவுக்கும் ஆன மன ஓட்ட்டங்களின் இடைவெளியும், அவர்களது பணிச்சூழலும் அவர்களது அகவாழ்வை பாதித்து நகர்கிறது.

      தன்னை தான் வகிக்க கூடிய துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களாக அறிமுகமாகும் வேணுகோபால், அர்ச்சனா போன்றவர்களும் இறுதியில் தன்னை வளர்த்துக்  கொள்ளத் தவறுபவரின் இறுதி என்பது தனியார் நிறுவனங்களின் நிலையற்ற தன்மைக்கு ஒரு சான்று.

      சாதியம் என்பது எப்படி புதியதொரு வாழ்கை முறையிலும் நிலை நிறுத்திக் கொள்கிறது  என்பதை ஒரிருவருக்கு மட்டும் ஊதிய உயர்வும், வெளிநாடுகளின் வேளையும் சாத்தியமாகிறது என்பது நாவலில் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ளது.

       நாவலின் அடியோட்டமாக அதிகாரத்தை கேள்வி கேட்கும் பெண் மனநோயாளியாக மாறும் தருணம் கண்களின் நீர் துளிர்க்க செய்கிறது.

      கிராமத்து பின்புலத்திலிருந்து வரும் மனிதனான விவேக் வெளிநாடு சென்று விடுமுறையில் மீண்டும் சொந்த ஊருக்கு செல்லும் தருணமும்,  அங்கு வாழ்ந்து வரும் மனிதர்களும் அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் அவனது முன்னாள் காதலியை சந்தித்த நிகழ்வும் அவனது உறக்கமில்லா இரவுகளில் ஊன்றி நிற்கும் வேரைப்போல இருக்கிறது.

      நாவலில் சஞ்சீவ் என்பவர் தான் சார்ந்த துறையில் தலைசிறந்தவராக இருப்பவர். அவர் கூகுளின் அலெக்ஸா செயலியுடன் நடத்தும் உரையாடல் மனதின் அகவெளிகளின் தத்துவார்த்தமான பகுதிக்கு இட்டு செல்கிறது.

      நாவலில் சஞ்சீவ் மிதிலன் இருவருக்குமான உரையாடலில் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களுக்கும், அமெரிக்க நிறுவனங்களுக்கும் இடையேயான உறவுமுறை என்பது அடிமாட்டிற்கும்,அச்சந்தை வியாபாரிக்கும் இடையேயான உறவுமுறை போல இருப்பதை விமர்சிக்கிறது.

      'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்பது போல தகவல் தொழில்நுட்பம் சார்ந்தவர்களின் வாழ்வு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தெரிந்தாலும் அவர்களுக்கும் பொருளாதார சிக்கல்களும்,புற வாழ்வின் தாக்கங்களும் இருக்க தான்‌ செய்கிறது என்பது நாவலின் பின்னோட்டம்.

           இத்தகைய வாழ்வியலிலும் மறைபொருளான இரவும், நிலவும் கை நீட்டி அவர்களை அழைத்துக் கொள்ளத் தவறுவதில்லை. அப்படியான நிலவு கை நீட்டும் பொழுதில் நாவலும் என்னை தன்னிடம் உள்வாங்கிக் கொண்டது. 







 

Comments

Post a Comment

Popular posts from this blog

வெறுமையின் ஒருநாள்-அரவிந்த்